கடனை சரியாக பயன்படுத்தி உள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடன்களை சரியாக பயன்படுத்தி உள்ளார்களா என்பது குறித்து ஆய்வுசெய்ய கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடன்களை சரியாக பயன்படுத்தி உள்ளார்களா என்பது குறித்து ஆய்வுசெய்ய கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வுக் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பில் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
நமது மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறத்தில் 7 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளது. 5,119 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.328 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடன்உதவிகளை சரியாக பயன்படுத்தி உள்ளார்களா என்பது குறித்தும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
சிறு தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளான சமையலுக்கு தேவையான பொருட்களை தயார்செய்து சந்தைப்படுத்த அறிவுரைகள் வழங்க வேண்டும். சிறு தொழில், நடுத்தர தொழில், பெரிய அளவிலான தொழில்கள் என 3 வகையான தொழில்களில் எந்த வகையான தொழில்களை மகளிர் சுயஉதவி குழுக்கள் செய்கிறார்கள் என்பது குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.
பொது மக்களின் தேவைகளான பேவர் பிளாக், எழுவதற்கு பயன்படும் அட்டைகள், கால் மிதி மேட் ஆகிய பொருட்களை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக தயார்செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் வேதநாயகம், ஜேம்ஸ்பிரபாகரன், முருகேசன், உமா, அனைத்து வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.