பாறாங்கற்கள் மீது ரெயில் மோதும் காட்சியை வீடியோவாக பதிவு செய்தேன் கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம்
மதுபோதையில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து அதன் மீது ரெயில் மோதும் காட்சியை வீடியோவாக பதிவு செய்தேன் என ரெயிலை கவிழ்க்க நடந்த சதியில் கைதான கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நாகர்கோவில்,
மதுபோதையில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து அதன் மீது ரெயில் மோதும் காட்சியை வீடியோவாக பதிவு செய்தேன் என ரெயிலை கவிழ்க்க நடந்த சதியில் கைதான கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தண்டவாளத்தில் பாறாங்கற்கள்
சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கடந்த 19-ந் தேதி இரவு இரணியல் அருகே உள்ள பாலோடு பகுதியை சென்றடைந்த போது தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறாங்கற்கள் மீது ரெயில் பலமாக மோதி விட்டு அந்த பகுதியை கடந்து சென்றது.
அதிர்ஷ்டவசமாக ரெயில் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் உயிர் தப்பினர். பாறாங்கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க நடந்த சதி என ரெயில்வே போலீசார் முடிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பிறகு ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர்லால் தலைமையில் துப்பு துலக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கொத்தனார் வாக்குமூலம்
தனிப்படையினர் நடத்திய விசாரணையில், விபத்து நடந்த அன்று ஆலஞ்சி பாறவிளை பகுதியை சேர்ந்த லெனின் என்ற சூரியா (வயது 24) அந்த பகுதியில் சுற்றி திரிந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். உடனே அவரை பிடித்து நேற்றுமுன்தினம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்ததை ஒப்பு கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்தது ஏன்? என்பது குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கொத்தனார் வேலை செய்து வருகிறேன். எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று தண்டவாள பகுதியில் நின்றபடி மது அருந்தி விட்டு போதையில் இருந்தேன். அப்போது தண்டவாளத்தில் பெரிய கல்லை வைத்தால் ரெயில் தடம் புரளுமா? அல்லது கல் உடைபடுமா? என்ற சோதனையை செய்ய முடிவு செய்தேன்.
எனவே அங்கிருந்த 2 பெரிய பாறாங்கற்களை தூக்கி வந்து தண்டவாளத்தின் மீது வைத்தேன். நானும் அந்த வழியாக ரெயில் வருகிறதா என காத்துகொண்டிருந்தேன்.
செல்போனில் வீடியோ பதிவு
அப்போது நாகர்கோவிலில் இருந்து குருவாயூர் ரெயில் வந்தது. உடனே எனது செல்போனை எடுத்து ரெயில் பாறாங்கற்கள் மீது மோதும் காட்சியை வீடியோவாக பதிவு செய்தேன். ரெயில் பாறாங்கற்கள் மீது மோதிவிட்டு தடம் புரளாமல் சென்று விட்டது. அப்போது பயங்கர சத்தம் எழுந்தது. பின்னர் வீட்டுக்கு தூங்க சென்றேன். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, அங்கு போலீசார் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் எனக்கு பயம் வந்தது.
எனவே வெளியூர் அல்லது கேரளாவுக்கு தப்பி செல்ல முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் போலீசார் என்னை மடக்கி பிடித்து விட்டனர். மதுபோதையில் விளையாட்டாக செய்த காரியத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு லெனின் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.