விராலிமலை முருகன் கோவிலுக்கு வந்த புதுப்பெண் கடத்தல்? போலீசார் விசாரணை
புதுப்பெண் கடத்தல்? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
விராலிமலை தாலுகா மீனவேலி ஊராட்சி பெரிச்சிப்பட்டியை சேர்ந்தவர் கோபால் மகன் மனோஜ் (வயது 29). கூலி தொழிலாளி. இவருக்கும், இலுப்பூர் தாலுகா முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் மகள் சரண்யா (27) என்பவருக்கும் கடந்த 9 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 19-ந்தேதி கணவன்-மனைவி இருவரும் விராலிமலை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது மனோஜ், சரண்யாவை மலையடிவாரத்தில் நிற்க சொல்லிவிட்டு பணம் எடுப்பதற்காக அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுள்ளார். மனோஜ் பணம் எடுத்து விட்டு திரும்பி வந்த போது சரண்யாவை காணவில்லை. இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மனோஜ் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யாவை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.