திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறிய தனிப்படை
திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தனிப்படை அமைப்பு
திருப்பத்தூர் அருகே கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து கருவில் இருப்பது ஆண் குழந்தையா?, பெண் குழந்தையா? என்பதை தெரிவித்த ஸ்கேன் மைய உரிமையாளர், உதவியாளர் கைது செய்யப்பட்டு, ஸ்கேன் மையம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால்மாவட்டம் முழுதும் உள்ள ஸ்கேன் சென்டர்கள், தனியார் மருத்துவமனைகள், பாலி கிளினிக்குகள் தமிழக அரசின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் போலி டாக்டர்கள் அதிக அளவில் உள்ளதாக புகார்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து ஒழிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைத்து கிராமங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயிற்சி வகுப்பு
மேலும், வேலூர் மாவட்டத்திலிருந்து நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டத்திற்கான மருத்துவ நிர்வாகம் ஏப்ரல் மாதம் 1-ந்் தேதியிலிருந்து செயல்பட உள்ளது. ஏப்ரல் மாதம், முதல் சனிக்கிழமை கலெக்டர் தலைமையில் ஸ்கேன் சென்டர் உரிமையாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. அதில், சான்றிதழ் குறித்த விளக்கம் மற்றும் தமிழக அரசின் மருத்துவ சட்ட திட்டங்கள் குறித்து விளக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.