நூதனமுறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் அருகே நூதனமுறையில் மோட்டார் சைக்கிள் திருடு போனது.

Update: 2022-03-21 17:18 GMT
திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூரை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி பச்சையம்மாள்(வயது 40). இவர் முருகன் கோவில் அருகே வடை விற்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 19-ந் தேதி கடைக்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், வடை சுட தேவையான எண்ணெய்யை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறினார். இதை நம்பி பச்சையம்மாளும் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வாங்கி, அதனை அந்த வாலிபரிடம் கொடுத்தார். மேலும் எண்ணெய் வாங்க, அந்த வாலிபருடன் ஒரு சிறுவனையும் பச்சையம்மாள் அனுப்பி வைத்தார். 
திருவெண்ணெய்நல்லூரில் இருந்து பண்ருட்டி மார்க்கமாக அந்த வாலிபர் புறப்பட்டார். சிறிது தூரம் சென்றதும் சிறுவனை பாதி வழியிலேயே இறக்கி விட்டு, அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. அதன்பிறகுதான் அந்த வாலிபர் நூதன முறையில் மோட்டார் சைக்கிளை திருடியது பச்சையம்மாளுக்கு தெரிந்தது. இதுகுறித்து பச்சையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்