பிளாஸ்டிக் பயன்பாடுகளை தடுக்க மஞ்சப்பை குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

பிளாஸ்டிக் பயன்பாடுகளை தடுக்க மஞ்சப்பை குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தெரிவித்தார்.

Update: 2022-03-21 17:15 GMT
பொள்ளாச்சி

பிளாஸ்டிக் பயன்பாடுகளை தடுக்க மஞ்சப்பை குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தெரிவித்தார்.

மஞ்சப்பை தோரணம்

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுக்க மஞ்சப்பை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பைகளை வீசி எறிவதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் உலக வன நாளையொட்டி மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடியில் மஞ்சப்பை தோரணம் கட்டப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து உலக வன நாளையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் மாணவ-மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:-

விழிப்புணர்வு

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை வீசி ஏறிகின்றனர். இதை சாப்பிடும் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ-மாணவிகள் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் வீடுகளில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். அப்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடுக்க முடியும். சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்தால் வனத்தில் வீசக் கூடாது. வனத்தை, வனவிலங்குகளையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மரக்கன்றுகள்

இதை தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகள் அந்த வழியாக சென்ற அரசு பஸ்களில் ஏறி பயணிகளிடம் மஞ்சப்பை குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மலைவாழ் மக்கள், மாணவிகள் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து குரங்கு நீர்வீழ்ச்சி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் உதவி வனபாதுகாவலர் செல்வம், வனச்சரகர் காசிலிங்கம், வனவர்கள் பிரபாகரன், ராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பில் உலக வனநாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கு வனச்சரகர் காசிலிங்கம் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார். பின்னர் வனவிலங்குகள், வனத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

மேலும் செய்திகள்