கோழிப்பண்ணையில் பெருச்சாளிகளை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தொழிலாளி சாவு-ராசிபுரம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

ராசிபுரம் அருகே கோழிப்பண்ணையில் பெருச்சாளிகளை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியானார். அவருடைய உறவினர்கள் ராசிபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2022-03-21 17:15 GMT
ராசிபுரம்:
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி கிராமம் அத்திபலகானூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி நல்லம்மாள். இந்த தம்பதிக்கு சூர்யா (வயது 21) என்ற மகன் இருந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள ஜெகநாதன் என்பவரின் கோழிப்பண்ணையில் கடந்த 8 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 
அந்த கோழிப்பண்ணையில் பெருச்சாளிகள் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவற்றை கட்டுப்படுத்த பண்ணையை சுற்றி அரசு அனுமதியின்றி ஜெகநாதன் மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது. இன்று காலை வழக்கம்போல் சூர்யா பண்ணைக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் ராசிபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதனிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த சூர்யாவின் உறவினர்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சூர்யா மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
புகார்
மின்வேலியில் சிக்கி பலியானது குறித்து சூர்யாவின் தாய் நல்லம்மாள் போலீசில் புகார் அளித்தார். அதில் கோழிப்பண்ணை உரிமையாளர் ஜெகநாதன் அரசு அனுமதியின்றி மின்சார வேலி அமைத்ததாகவும், அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் அமைத்ததால் எனது மகன் உயிரிழந்துள்ளார். எனவே உரிய விசாரணை நடத்தி ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ராசிபுரம் அருகே கோழிப்பண்ணையில் பெருச்சாளிகளை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்