எலக்ட்ரீசியன் குடும்பத்தினருக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

எலக்ட்ரீசியன் குடும்பத்தினருக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2022-03-21 16:54 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள தாதன்கோட்டையை சேர்ந்தவர் தங்கராஜ். எலக்ட்ரீசியன். அவருடைய மனைவி அம்சவள்ளி (வயது 47). கடந்த 1.8.2016 அன்று தங்கராஜ், வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் வந்தார். பின்னர் அன்றையதினம் இரவு தாதன்கோட்டைக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலையில் செம்மடைப்பட்டி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கோவை போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ் எதிர்பாராதவிதமாக தங்கராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து தங்கராஜின் மனைவி, கோவை அரசு போக்குவரத்து கழகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அதே ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் வி.சண்முகசுந்தரம் வழக்கை நடத்தி வந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், தங்கராஜ் குடும்பத்தினருக்கு கோவை அரசு போக்குவரத்து கழகம் ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி தீர்ப்பளித்தார். ஆனால் கோவை அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டு தொகையை வழங்காததால் அம்சவள்ளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி சரவணன், வட்டியுடன் சேர்த்து ரூ.19 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன் பின்னரும் இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் மனுதாரர் தரப்பில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சரவணன், கோவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு செல்லும் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினர்.

மேலும் செய்திகள்