கள்ளக்குறிச்சியில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் கலெக்டர் வழங்கினார்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
கள்ளக்குறிச்சி
குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், கடன் உதவி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம், காவல் துறை தொடர்பான புகார் மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 327 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
12 பேருக்கு ஸ்கூட்டர்
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று 41 பேரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.78 ஆயிரத்து 500 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை வழங்கினார். மேலும் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளுக்கு பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.3 ஆயிரம் என 7 மாதங்களுக்கு தலா ரூ.21 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, திட்ட இயக்குனர் மணி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்)ராஜாமணி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.