வடமதுரை மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

வடமதுரை மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-03-21 16:20 GMT
வடமதுரை:
வடமதுரையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மாசி பெருந்திருவிழா கடந்த 5-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகளும், அலங்கார ரதத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதற்காக வடமதுரையில் உள்ள மங்கம்மாள்கேணி அருகே 15 அடி சுற்றளவில் குழி அமைக்கப்பட்டு நெருப்பு மூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் வடமதுரையில் உள்ள ஏழுமலையான் கோவில் பூசாரியை ஊர்வலமாக அழைத்து வந்தனர். பூசாரி ஒரு கையில் தீப்பந்தம், மறு கையில் சாட்டையுடன் அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். 
பின்னர் கோவில் பூசாரி முதலில் பூக்குழியில் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவரைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். வடமதுரை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையிலான போலீசார் மற்றும் வேடசந்தூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுகன்யா, வடமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


மேலும் செய்திகள்