மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்

மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்

Update: 2022-03-21 16:03 GMT
பெங்களூரு:

தமிழகத்திற்கு உரிமை

  தமிழக சட்டசபையில் கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  காவிரி நீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. பொதுவான ஆண்டுகளில் 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நீரை மட்டுமே பெற தமிழகத்திற்கு உரிமை உள்ளது. இதற்காக கர்நாடக நிர்வாக ஆணையம் அமைக்கப்பட்டது.

பிரச்சினை இல்லை

  அந்த தீா்ப்பு வந்த பிறகு இதுவரை 400 டி.எம்.சி. அளவுக்கு நீர் தமிழகத்திற்கு சென்றுள்ளது. அதனால் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும். கர்நாடகத்தின் நீர் வீணாக தமிழ்நாட்டிற்கு செல்கிறது. தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே பிரச்சினை இல்லை. இந்த பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் தீர்க்கப்பட்டுவிட்டது.

கூட்டாட்சி தத்துவம்

  மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற வேண்டும். நீண்ட நாட்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி இருக்க வேண்டும். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மேகதாது திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார். பா.ஜனதாவின் செல்வாக்கை அதிகரிக்கவே மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் நாடகமாடுகிறது. மத்தியிலும்-மாநிலத்திலும் இரட்டை என்ஜின் அரசு உள்ளது. உடனே மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற வேண்டும்.
  இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்