மசினகுடி பகுதியில் யானை வழித்தட கமிட்டி 2 வது நாளாக ஆய்வு
மசினகுடி பகுதியில் யானை வழித்தட கமிட்டி 2 வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
கூடலூர்
மசினகுடி பகுதியில் யானை வழித்தடங்களில் உள்ள தங்கும் விடுதி கட்டிடங்களை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தொடர்ந்து யானை வழித்தடங்களில் உள்ள தங்கும் விடுதிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இதனால் விடுதிகளின் உரிமை யாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி விடுதி உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக சிங்காரா, சீகூர் பகுதியில் உச்சநீதிமன்ற கமிட்டி ஆய்வு நடத்தியது. மசினகுடி அருகே தொட்லிங், பொக்காபுரம் பகுதியில் உச்சநீதிமன்ற கமிட்டி ஆய்வு செய்தது.
2-வது நாளாக தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வெங்கட்ராமன் தலைமையிலான கமிட்டி சொக்கநல்லி, வாழைத்தோட்டம் பகுதியில் ஆய்வு நடத்தியது.
இதில் திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா (நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டர்), மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி உள்பட அதிகாரிகள், வனத்துறையினர் போலீசார் கலந்து கொண்டனர்.