கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், திண்டுக்கல் மாவட்ட கால்நடை வளர்ப்போர் சங்கம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் காசிமாயன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் சிவமணி, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட கால்நடை வளர்ப்போர் சங்க மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஆவின்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும். அதாவது பசும்பால் விலையை லிட்டருக்கு ரூ.42 ஆகவும், எருமைபால் விலையை லிட்டருக்கு ரூ.51 எனவும் உயர்த்த வேண்டும். கடந்த ஆண்டு 5 ஆயிரம் கறவை மாடுகள், 10 ஆயிரம் ஆடுகள் கோமாரி நோய்க்கு பலியாகின. இதனை தடுக்க ஆடு, மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கறவை மாடுகள், ஆடுகளுக்கு இலவச கொட்டகை அமைக்கும் திட்டத்தில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அகில இந்திய விவசாயிகள் சங்க மத்திய குழு உறுப்பினர் சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.