பா.ஜனதா ஆட்சியில் நடந்த நிதி முறைகேடு குறித்து விசாரணை- மேல்-சபையில் மந்திரி யசோமதி தாக்குர் தகவல்
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தில் பா.ஜனதா ஆட்சியில் நடந்த நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மந்திரி யசோமதி தாக்குர் தெரிவித்தார்.
மும்பை,
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தில் பா.ஜனதா ஆட்சியில் நடந்த நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மந்திரி யசோமதி தாக்குர் தெரிவித்தார்.
‘பிரஜ்வாலா’ திட்டம்
தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின்போது 2019-ம் ஆண்டு ‘பிரஜ்வாலா’ என்ற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. சுய உதவி குழுவின் உறுப்பினர்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு, சமூக, நிதி அறிவை ஏற்படுத்துதல் போன்றவை இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். மராட்டிய பெண்கள் ஆணையத்தால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் நிதி முறைகேடு நடந்ததாக தற்போதைய மகா விகாஸ் அகாடி அரசு குற்றம்சாட்டி உள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அரசு அறிவித்து உள்ளது.
மேல்-சபையில் அறிவிப்பு
இது தொடர்பாக மராட்டிய மேல்-சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி யசோமதி தாக்குர் பதிலளித்து பேசியதாவது:-
பிரஜ்வாலா திட்டத்தில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்து இருப்பது தெளிவாகிறது. மாநில பெண்கள் ஆணையம் மூலம் சமர்பிக்கப்பட்ட ரசீதுகள் கைப்பட எழுதப்பட்டு உள்ளன. உரிய நடைமுறைகளை பின்பற்றி ரசீதுகள் எழுதப்படவில்லை. 98 தொகுதிகளில் மட்டும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இருந்த தொகுதிகளை இலக்காக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது முழுமையாக நெறிமுறைகளை மீறிய செயல். இந்த திட்டம் தொடர்பாக ஏற்கனவே மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியும் தவறுகளை சுட்டிக்காட்டி உள்ளார்.
விசாரணைக்கு அழைக்கப்படுவார்
இந்த நிலையில் திட்டத்தில் நடந்த நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும். இதற்காக கமிட்டி அமைக்கப்படும். பெண்கள் ஆணைய தலைவியாக இருந்தவரும் விசாரணைக்காக அழைக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிதிமுறைகேடு நடந்ததாக கூறப்படும் காலக்கட்டத்தில் பா.ஜனதாவை சேர்ந்த விஜய ரகத்கர் மாநில பெண்கள் ஆணைய தலைவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.