தூத்துக்குடியில் தச்சு தொழிலாளி தற்கொலை மிரட்டல்

தூத்துக்குடியில் உயர் அழுத்த மின்கோபுரத்தில் ஏறி தச்சு தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-03-21 14:35 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உயர் அழுத்த மின்கோபுரத்தில் ஏறி தச்சு தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பாக அவரை மீட்டனர்
தச்சு தொழிலாளி
தூத்துக்குடி இந்திய உணவுக்கழக குடோன் அருகே உள்ள ஒரு உயர் அழுத்த மின்கோபுரத்தில் ஒருவர் ஏறி அமர்ந்து இருந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மின்கோபுரத்தில் இருந்தவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 38) என்பதும், தச்சு தொழிலாளி என்பதும் தெரிய வந்தது.
நடவடிக்கை
தொடர்ந்து சுந்தர், ஒரு மனுவை கீழே போட்டார். அந்த மனுவில், நான் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சத்துக்கான சீட்டு போட்டு இருந்தேன். இதில் ரூ.2 லட்சம் வரை பணம் செலுத்தி உள்ளேன். கொரோனாவுக்கு பிறகு தொழில் சரிவர நடக்காததால், சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறேன். ஆகையால் சீட்டு பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் தர மறுக்கிறார்கள். ஆகையால் எனக்கு பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
பின்னர் போலீசார், பணத்தை திரும்பி பெறுவதற்கு, தனியார் நிதி நிறுவன அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சுந்தர் மின்கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். 
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்