கல்பாக்கம் அருகே என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை
கல்பாக்கம் அருகே என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தீக்குளிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் தன்னுடைய உடலில் தனக்குதானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதை பார்த்த பொதுமக்கள் தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணையில் அந்த நபர் சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ராஜேஷ் (வயது 39) என்பது தெரியவந்தது. இவர் சென்னை தரமணியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும், சென்னை ராமாபுரத்தை சேர்ந்த கல்பனா என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 6 மாத காலமாக கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
சாவு
நேற்று ராஜேஷ் தனது மனைவியை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே ராஜேஷ் இரு சக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். வாட்ஸ் அப் மூலம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ ஒன்றை மனைவிக்கு அனுப்பி உள்ளார். பின்னர் எலி மருந்து (விஷம்) குடித்த அவர் தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.