செம்பரம்பாக்கம் ஏரியின் வாய்க்கால் பகுதிகளில் ரூ.8½ கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் வாய்க்கால் பகுதிகளில் ரூ.8½ கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.

Update: 2022-03-21 10:24 GMT
ஆக்கிரமிப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட மலையம்பாக்கம் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரியின் வாய்க்கால் புறம்போக்கு நிலம் 70 சென்ட் பரப்பளவில் ஒரு சிலர் ஆக்கிரமித்து அந்த பகுதியில் கட்டிடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.

இதே போல் கொழுமுணிவாக்கம் பகுதியிலும் செம்பரம்பாக்கம் ஏரியின் வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் 30 சென்ட் பரப்பளவு இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து அந்த பகுதியில் சுற்றுச்சுவர் கட்டியிருந்தார்.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் வாய்க்கால் புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.

அரசு நிலம் மீட்பு

இந்த நிலையில் நேற்று குன்றத்தூர் தாசில்தார் பிரியா, பொதுப்பணித்துறை அதிகாரி பாபு, மண்டல துணை தாசில்தார் சங்கர் தலைமையிலான அரசுத்துறை அதிகாரிகள் மலையம்பாக்கம் மற்றும் கொழுமுணிவாக்கம் பகுதிகளில் வாய்க்கால் புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்களை போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரத்தின் மூலம் இடித்து அகற்றி அரசு நிலங்களை மீட்டனர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.8½ கோடி என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்