மஞ்சள் மீதான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்; விவசாயிகள் வட்ட மேஜை மாநாட்டில் தீர்மானம்

மஞ்சள் மீதான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூருவில் நடைபெற்ற விவசாயிகள் வட்ட மேஜை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-03-20 21:18 GMT
பெங்களூரு:

சர்க்கரை ஆலை

  விவசாயிகள் வட்ட மேஜை மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் தேசிய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தக்குமார், தேசிய மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

  கரும்பில் இருந்து எத்தனால் தயாரிக்க அருகில் உள்ள சர்க்கரை ஆலையின் அனுமதியை பெற வேண்டும் என்பதை ரத்து செய்ய வேண்டும். அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் சட்ட ரீதியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து பயிர்களுக்கு பசல் பீமா காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வெள்ளம், வறட்சி, தீ விபத்தில் நாசமாகும் பயிர்களுக்கு வழங்கப்படும் நிவாரண விதிகளை திருத்தி அமைக்க வேண்டும்.

வேளாண்மை சந்தைகள்

  மஞ்சள் மீதான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தது போல், கர்நாடக அரசும் வேளாண்மை சந்தைகள் சட்டம் மற்றும் நில சீர்திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு கரும்புக்கு டன்னும் கூடுதலாக ரூ.200 வழங்குகிறது. அதே போல் கர்நாடக அரசும் கூடுதல் உதவியை வழங்க வேண்டும்.

  இந்த மாநாட்டில் தெலுங்கானா, கேரளா, மராட்டியம், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்