சமயபுரம்
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரிலிருந்து அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச் செல்வதாக திருச்சி கனிமவள தனி தாசில்தார் ஜெயபிரகாசத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது தலைமையில் தனிப்படையினர் மண்ணச்சநல்லூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சியம் அருகே உள்ள ரெட்டை மண்டபம் என்ற இடத்தில் வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனையிட்டபோது, அதில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த ஜெயப்பிரகாஷ், அதனை ஓட்டிவந்த ஜீவா மகன் செல்வமணி (வயது 27), அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் பிரசாந்த் (23) ஆகிய 2 பேரை பிடித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.