பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து
முக்கூடல் பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
முக்கூடல்:
முக்கூடல் பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
பழைய கட்டிடம்
நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்கு சொந்தமான பழைய கட்டிடம் பல ஆண்டுகளாக பேரூராட்சி அலுவலகமாக செயல்பட்டு வந்தது. தற்போது அதன் அருகில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அங்கு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதனால் பழைய கட்டிடத்தில் மின்சார சாதனங்கள், தளவாட பொருட்கள், பழைய பொருட்கள் வைக்கும் அறையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
தீவிபத்து
இந்த நிலையில் நேற்று காலையில் இந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக முக்கூடல் போலீசுக்கும், சேரன்மாதேவி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீைர பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. எனினும் இந்த பயங்கர தீவிபத்தில் அந்த அறையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து முக்கூடல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.