உறவினரை தாக்கிய மாற்றுத்திறனாளி மீது வழக்கு
கூத்தாநல்லூர் அருகே உறவினரை தாக்கிய மாற்றுத்திறனாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே பாலாகுடி மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர், வெளிநாடு செல்வதற்கு முன்பு கூத்தாநல்லூர் அருகே அதங்குடி தெற்குசேத்தியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று வரும் போது, அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மணிகண்டனைவி்ட்டு பிரிந்து அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் வெளிநாடு சென்று சமீபத்தில் சொந்த ஊர் வந்த மணிகண்டன், தெற்குசேத்தியில் உள்ள அக்காவின் கணவர் சதீசிடம் (30), தனது மனைவியை தன்னோடு சேர்த்து வைக்குமாறு கூறி, குடிபோதையில் சதீசுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத்திறனாளியான சதீஷ் தான் கையில் வைத்திருந்த ஊன்றுகோலால் மணிகண்டனை தாக்கினார்.
இதில் காயம் அடைந்த மணிகண்டன், சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.