கணவர் நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி

தஞ்சையில் கணவர் நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். இதைப்போல டி.டி.வி.தினகரனும் மா.நடராசன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2022-03-20 20:01 GMT
தஞ்சாவூர்:
தஞ்சையில் கணவர் நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். இதைப்போல டி.டி.வி.தினகரனும் மா.நடராசன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 
 நினைவு தினம்
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு எதிரே சசிகலாவின் கணவர் ம.நடராசன் நினைவிடம் உள்ளது. நடராசனின் 4-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடம் மலர்கள், பழங்களால் நேற்று அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ஏற்கனவே கடந்த 17-ந் தேதி நள்ளிரவு சசிகலா தஞ்சைக்கு வந்து, பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார். நேற்று காலை 6.10 மணிக்கு வீட்டில் இருந்து காரில் சசிகலா புறப்பட்டு தனது கணவர் நினைவிடத்துக்கு சென்றார். .
பின்னர் கணவர் ம.நடராசன் புகைப்படத்திற்கு ஏலக்காய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து நினைவிடத்தில் கோ பூஜை நடந்தது.  பின்னர் கணவர் நினைவிடத்தில் சசிகலா தீபம் ஏற்றி வழிபட்டதுடன், நினைவிடத்தை சுற்றி வந்து கணவர் புகைப்படத்துக்கு முன்பகுதியில் அமர்ந்தார். கணவரின் புகைப்படத்தை பார்த்து கொண்டே இருந்த சசிகலா கண் கலங்கினார்.
பூக்கள் தூவப்பட்டன
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, நினைவிடத்தில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.  அப்போது அவர், உங்களுக்கு (சசிகலா) நல்லநேரம் தொடங்கி விட்டது. நீங்கள் பூக்களை தூவுங்கள் என கூற சசிகலா பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், நடிகை சி.ஆர்.சரஸ்வதி மற்றும் ஆதரவாளர்கள் பலர் நடராசன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 7.05 மணிக்கு கணவர் நினைவிடத்தில் இருந்து சசிகலா காரில் புறப்பட்டு, பரிசுத்தம்நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.
டி.டி.வி.தினகரன்
இந்தநிலையில் நேற்றுமதியம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சைக்கு வந்து ம.நடராசன் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாநில வக்கீல் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். ம.நடராசன் நினைவிடத்தில் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர். 

மேலும் செய்திகள்