பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்
தென்காசியில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தென்காசி:
தென்காசியில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய பாலம்
தென்காசியில் இருந்து கேரள மாநிலத்திற்கு இலஞ்சி, செங்கோட்டை, புளியரை வழியாக குறைந்த நேரத்தில் எளிதில் சென்று விடலாம். இந்த பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள், தமிழக, கேரள பஸ்கள் சென்று வந்தன.
தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் பாதையில் துணை மின் நிலையம் அருகில் சிற்றாற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டும் பணி நபார்டு வங்கி நிதி திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.
வெள்ளப் பெருக்கினால் சேதம்
தமிழக-கேரள சாலையை இணைக்கும் இந்த பாலத்தின் பணியானது வேகமாக நடைபெற்று வந்தது. ஆற்றின் இருபுறமும் பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று. இருபகுதிகளை இணைக்கும் பணி தொடங்கியபோது பலத்த மழை பெய்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது கட்டுமானத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் ரூ.15 லட்சம் வரை சேதம் அடைந்தது. இதனால் இந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
விரைந்து முடிக்க கோரிக்கை
இதன் பிறகு மீண்டும் பணி தொடங்கியது. தற்போது ஆற்றின் குறுக்கே பாலத்தின் இருபுறத்தையும் இணைக்கும் பணி 75 சதவீதம் நடைபெற்று உள்ளது. இதனால் கடந்த ஒரு ஆண்டாக இலஞ்சி, செங்கோட்டை, புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் தென்காசியில் இருந்து மேலகரம், குற்றாலம் சுற்றி தான் சென்று வருகின்றன. இதனால் கால விரயம் ஏற்படுகிறது.
எனவே இந்த பாலத்தின் பணியை விரைவாக முடித்து போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் கால தாமதம் ஆனால் ஜூன் மாதம் குற்றாலம் சீசன் தொடங்கிவிடும். அப்போது சாரல் மழை பெய்யும் என்பதால் பணி பாதிக்கப்படும். இதுகுறித்து கட்டுமான நிறுவனத்தாரிடம் கேட்டபோது இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிவடைந்து விடும் என்று கூறினார்கள்.