அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்
சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம்:-
சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்கள் தலைசிறந்தவர்களாக விளங்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை மூலம் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தரமான கல்வியை உறுதி செய்யவும், அரசு பள்ளிகளை மேம்படுத்தவும், பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு பெற்றோர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
கல்வி பயின்று வருகின்றனர்
மாவட்டத்தில் 1,110 அரசு தொடக்க பள்ளிகளில் 81 ஆயிரத்து 737 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதே போன்று 366 அரசு நடுநிலை பள்ளிகளில் 68 ஆயிரத்து 720 பேர், 136 அரசு உயர்நிலை பள்ளிகளில் 30 ஆயிரத்து 991 பேர், 159 அரசு மேல்நிலை பள்ளிகளில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 89 பேர் என மொத்தம் 1,771 அரசு பள்ளிகளில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 537 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் பள்ளி மேலாண்மை குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் அனைத்து பள்ளிகளிலும் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தாரமங்கலம்
தாரமங்கலம் நகராட்சி 9-வது வார்டு அருணாசலம் புதூர் அரசு நடுநிலைப்பள்லியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியை உமையவள் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் விமலா, வார்டு கவுன்சிலர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வியாளர் மாரி பள்ளி மேலாண்மை குழுவை மேம்படுத்துவது குறித்து பேசினார். இதில் ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.