பூலாம்பட்டி சந்தைக்கு பாலமலை புளி வரத்து அதிகரிப்பு
பூலாம்பட்டி சந்தைக்கு பாலமலை புளி வரத்து அதிகரித்துள்ளது.
எடப்பாடி:-
பூலாம்பட்டி சந்தைக்கு பாலமலை புளி வரத்து அதிகரித்துள்ளது.
பாலமலை புளி
பூலாம்பட்டி அருகே உள்ள பாலமலையில் புளி அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் புளிகள் மாசி, பங்குனி மாதங்களில் அறுவடை செய்யப்படும். பின்னர் தோல் உடைத்து பூலாம்பட்டி சந்தையில் விற்பனை செய்யப்படும்.
இந்தநிலையில் தற்போது பூலாம்பட்டி சந்தைக்கு, பாலமலையில் இருந்து புளி வரத்து அதிகரித்துள்ளது. இதனை வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் பூலாம்பட்டியில் பாலமலை புளி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து பாலமலையை சேர்ந்த புளி வியாபாரிகள் கூறியதாவது:-
மகிழ்ச்சி
பாலமலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள புளிக்கு தனிச்சுவை உள்ளது. இதனால் அறுவடை செய்யப்படும் புளிகள் விசைப்படகு மூலம் கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கூடை புளி ரூ.1,000 முதல் ரூ.1,300 வரை விற்பனையாகிறது. இதனை வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். பொதுமக்களிடையே பாலமலை புளிக்கு நல்ல வரவேற்பு உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூலாம்பட்டி சந்தையில் புளிகளை விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.