வலங்கைமான் பகுதியில் தூய்மை பணி தீவிரம்
மகாமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பாடைகாவடி திருவிழா வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் நெரிசல் இல்லாம், பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்கும், நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் வசதியாக தடுப்புகள் அமைத்து வருவதுடன் சுற்றுப்பிரகாரம் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து தெருக்களும் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக மகாமாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர், வலங்கைமான் பேரூராட்சி வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, போலீசார் உள்ளிட்ட பல தரப்பினரும் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். நேற்று 2-வது காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனால ்அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.