வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்

மயிலாடுதுறையில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2022-03-20 18:46 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில்  வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். 
ரூ.27 லட்சம் நிலுவை தொகை
மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான பல்வேறு கட்டிடங்களில் அரசுத் துறைக்கு சொந்தமான நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளன. இவற்றில் 40-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகை உள்ளது. நிலுவை வாடகையை செலுத்தும்படி நகராட்சித்துறையால் நோட்டீஸ் அளிக்கப்பட்டும், வாடகை செலுத்தப்படாத வணிக நிறுவனங்களை பூட்டி ‘சீல்’ வைக்க மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு உத்தரவிட்டார்.
 அதன்பேரில் வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி  ‘சீல்’ வைக்கும் பணி நகராட்சி வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நேற்று தொடங்கியது.  இதில் ரூ.27 லட்சம் வாடகை நிலுவை தொகை செலுத்தாத கிட்டப்பா அங்காடியில் உள்ள அரசுத்துறை நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி கடையை  நகராட்சிதுறை அதிகாரிகள் பூட்டி  ‘சீல்’ வைத்தனர். 
10 கடைகளுக்கு ‘சீல்’
இதேபோல் ரூ.1 லட்சம் வாடகை செலுத்தாத காதி வஸ்திராலயம் நிறுவனத்தையும், கச்சேரி சாலையில் எம்.எம்.ஆர் அங்காடியில் உள்ள மேலும் 2 கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர். தொடர்ந்து, பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் உள்பட நேற்று மட்டும் 10 கடைகளுக்கு  ‘சீல்’வைக்கப்பட்டன. 
ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 கடைகளுக்கு  ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ.20 ஆயிரத்திற்கு மேல் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அனைத்துக் கடைகளும் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்