தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் 843 மாணவிகளுக்கு பட்டம்

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் 843 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

Update: 2022-03-20 18:33 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் 21-வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு இ.எஸ்.கல்வி குழும தலைவர் கல்வியாளர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். முதல்வர் பிருந்தா வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர்  கதிரேசன் கலந்துகொண்டு இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை நிறைவுசெய்த 843 மாணவிகளுக்கு பட்டங்களையும், துறைவாரியாக பல்வேறு பாடங்களில் முதல் இடம் பிடித்த 39 மாணவிகளுக்கு கல்லூரி அறக்கட்டளை சார்பில் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  நாம் எவ்வளவு பேருக்கு அன்னதானம் வழங்கினாலும் அது ஒரு ஆணிற்கோ, பெண்ணிற்கோ கொடுக்கும் கல்விக்கு ஈடாகாது.  பட்டங்களை பெற்றுள்ள நீங்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லதொரு பெயரை பெற்று சாதிக்க வேண்டும் என்றார். விழாவில் கல்லூரி துணை பதிவாளர் தியாகராஜன், தேர்வுக்கட்டுப்பாட்டாளர் ஸ்ரீதேவி மற்றும் புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி ஆராய்ச்சி முதன்மையர் கலைமதி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்