தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
திருமருகல்-பூந்தோட்டம் சாலையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. மேலும் கிடாமங்கலத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதை கவனித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல்-பூந்தோட்டம் சாலையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. மேலும் கிடாமங்கலத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதை கவனித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான மின்கம்பம்
திருமருகலில் இருந்து பூந்தோட்டம் செல்லும் மெயின் சாலை உள்ளது. இந்த சாலை வழியே அரசு பஸ்கள், கனரக வாகனங்கள், கார், வேன் ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் போலகம் நடுத்தெருவில் சாலையில் உள்ள மின்கம்பம் கஜா புயலில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
தாழ்வாக மின்கம்பிகள்
இதேபோல கிடாமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் குடிசை பகுதிகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் இருந்து செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக குடிசை வீடுகளை உரசி செல்கிறது. இதனால் வேகமாக காற்று வீசும் நேரங்களில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகள் பறந்து குடிசை வீடுகளில் விழுகிறது. இதனால் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. எந்த நேரத்தில் தீவிபத்து ஏற்படுமோ என அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நடவடிக்கை
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து உடனடியாக ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். மேலும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோாரிக்கை விடுத்துள்ளனர்.