குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதி
எஸ்.புதூர் பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஒன்றியம் மலையும், மலைசார்ந்த பகுதியாகவும், விவசாயம் பிரதான தொழிலாகவும் உள்ளது. இந்த நிலையில் எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, கரிசல்பட்டி மற்றும் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மிக குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மின்சார சாதனங்களை இயக்க முடியாமலும், விவசாயிகள் கிணறு மற்றும் போர்வெல் மூலமாக நீர் இறைக்க முடியாமலும், சிறு வணிகர்களின் தொழில்களும் பாதிக்க தொடங்கியுள்ளது. சிறு குழந்தைகள், முதியவர்கள் பெருமளவில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக சிரமப்பட்டுவருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்னழுத்தம் குறைய தொடங்கிய பகுதிகளில் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.