ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

ஆசாரிபள்ளத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-20 17:49 GMT
நாகர்கோவில், 
ஆசாரிபள்ளத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
 நகை பறிப்பு
நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் மரிய செல்வி (வயது 72), ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் தினமும் காலையில் அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனை செய்ய செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று மரிய செல்வி ஆலயத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மரிய செல்வியை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 6¼ பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர். 
கண்காணிப்பு கேமரா காட்சி
இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆசாரிபள்ளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 2 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் மேலஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த சேவியர் வின்ஸ்லின் (24) மற்றும் ஸ்டாலின் (25) என்பதும், ஓய்வு பெற்ற ஆசிரியை மரிய செல்வியிடம் நகை பறித்ததும் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து வின்ஸ்லின், ஸ்டாலின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு இதுபோன்று வேறு ஏதேனும் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-----

மேலும் செய்திகள்