மாணவர்கள் மோதல்; ஒருவருக்கு அரிவாள் வெட்டு

மயிலம் முருகன் கோவில் திருவிழாவில் மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-03-20 17:48 GMT
மயிலம், 

மயிலம் அருகே உள்ள எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் எட்டியான் மகன் பார்த்திபன்(வயது 20). தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தனது நண்பர்களுடன் மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற முத்துபல்லக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  இதேபோல் திண்டிவனம் டி.வி.நகரை சேர்ந்த சசிகுமார் மகன் ஆகாஷ் (19). இவர், திண்டிவனத்தில் உள்ள ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், தனது நண்பர்களுடன் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். 

மாணவர்கள் மோதல்
 
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது. அப்போது பார்த்திபனும், ஆகாசும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில்  பார்த்திபன் தரப்பை சேர்ந்தவர்கள், ஆகாசை கடுமையாக தாக்கினர்.   இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், அருகில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த அரிவாளை எடுத்து பார்த்திபனை வெட்டினார். இதில் அவரது கையில் வெட்டு விழுந்து, ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதை பார்த்து பதற்றமடைந்த பக்தர்கள், அலறியடித்து ஓடினர். இதையடுத்து பார்த்திபனை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நண்பர்கள் சேர்த்தனர். 

10 பேர் மீது வழக்கு 

பின்னர் மேல்சிகிச்சைக்காக பார்த்திபன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதனிடையே பார்த்திபன் தரப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆகாசை மயிலம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த பார்த்திபன், ஆகாஷ் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்