குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் பள்ளிகளில் மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் தகவல்
குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் பள்ளிகளில் அரசின் சார்பில் பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறினார்.
கிருஷ்ணகிரி:
குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் பள்ளிகளில் அரசின் சார்பில் பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறினார்.
பெற்றோர் கலந்தாய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 1,712 அரசு பள்ளிகளில் நேற்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தொடர்பான பெற்றோர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் பரிதா நவாப், அரசு ஆண்கள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் அரசு பள்ளிகளில் விரைவில் பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட உள்ளது. 20 பேர் கொண்ட இந்த குழுவில் 2 உள்ளாட்சி பிரதிநிதிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த குழு மாதம்தோறும் அரசு பள்ளிக்கூடத்தில் கூட்டம் நடத்தி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்து தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்து அடிப்படை வசதிகளை பெறலாம்.
குழந்தை திருமணம்
மேலும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள், வகுப்பில் நடத்தக்கூடிய பாடங்கள் குறித்தும் இந்த குழு ஆய்வு செய்யலாம். இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அரசு பள்ளியில் தேவையான அடிப்படை மற்றும் முழு கற்றல் கல்வியும் கிடைக்கிறதா? என கண்டறிய முடியும். மேலும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறையை தடுக்க முடியும். மாணவ, மாணவிகள் பள்ளி இடைநின்றலை தடுக்க ஏதுவாக அமையும் என்று கூறினார்.
இதில் கவுன்சிலர்கள் பாலாஜி, சீனிவாசன், முகமது ஆசிப், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் திருமலைசெல்வம், நூர்முகமது, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.