ராஜாக்கமங்கலத்தில் புதைக்கப்பட்ட 70 கிலோ பட்டாசுகள் பறிமுதல்
ராஜாக்கமங்கலம் அருகே வெடி மருந்து வெடித்து சிதறிய சம்பவத்தை தொடர்ந்து நடந்த சோதனையில் 70 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கணவன், மனைவி தலைமறைவாகி விட் டனர்.
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே வெடி மருந்து வெடித்து சிதறிய சம்பவத்தை தொடர்ந்து நடந்த சோதனையில் 70 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கணவன், மனைவி தலைமறைவாகி விட் டனர்.
சிறுமி பலி
ராஜாக்கமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜன் என்ற ராஜன், தொழிலாளி. இவர் அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு பட்டாசு தயாரிப்பதற்காக வீட்டின் முன்பு உள்ள சிறிய அறையில் வெடி மருந்தை சாக்குப்பையில் வைத்து இருந்தார். அந்த அறைக்கு ராஜனின் மகள் வர்ஷா (வயது 10) சென்றாள்.
அப்போது வெடிமருந்து வெடித்து சிதறியதில் வர்ஷா உடல் சிதறி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் கடந்த 14-ந்தேதி நடந்தது.
இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ராஜனுக்கு வெடிமருந்து கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த ராமலட்சுமி (65), அவருடைய தங்கை தங்கத்தையும் போலீசார் கைது செய்தனர்.
மீண்டும் சம்பவம்
இந்தநிலையில் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (42), மரப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் பின்புறம் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.
அந்த தோப்பில் மண்ணை தோண்டி புதைத்து வைத்து இருந்த வெடிமருந்து நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் 10 வீடுகள் சேதம் அடைந்தன. சிறுமிகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
70 கிலோ பட்டாசு பறிமுதல்
அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வேறு எங்காவது வெடிமருந்து, பட்டாசு புதைத்து வைக்கப்பட்டு உள்ளதா? என்று போலீசார் மோப்ப நாய் காஸ்பரை வரவழைத்து சோதனை நடத்தினர்.
அப்போது இன்னொரு தோட்டத்திற்கு மோப்பநாய் ஓடி சென்று நின்றது. போலீசார் அப்பகுதியில் பார்த்த போது குழி ஒன்று தோண்டி மூடப்பட்ட தடயம் இருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலையில் அந்த இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்ததில் 8 மூடைகளில் சுமார் 70 கிலோ பட்டாசுகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் தேடுகிறது
அப்போது ஆறுதெங்கன்விளையில் கைது செய்யப்பட்ட ராமலட்சுமியின் மகளை தான் ராஜேந்திரன் திருமணம் செய்து இருப்பதும், ஆறுதெங்கன்விளையில் வெடிமருந்து மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்வதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து அங்கு இருந்த வெடிமருந்தை கொண்டு வந்து, ராஜேந்திரன் தனது வீடு அருகே குழிதோண்டி புதைத்து இருந்ததாகவும், வெடிமருந்து வெடித்து சிதறியதும், அவர் வீட்டுக்கு வந்து, மனைவியை அழைத்து சென்று தலைமறைவானதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து ராஜாக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை தேடி வருகிறார்கள்.
ராஜேந்திரன் பிடிபட்டால் தான் எங்கெங்கு வெடிமருந்து, பட்டாசு புதைத்து வைக்கப்பட்டு உள்ளது என்ற தகவல் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். அவர் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.