தூத்துக்குடி:
தூத்துக்குடி மீளவிட்டான் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் பொன்முனியசாமி. இவருடைய மகன் சந்தனராஜ் (வயது 39). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரது ஆடுகளை வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு விட்டு இருந்தாராம். அப்போது ஒரு ஆட்டை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அப்போது, தாளமுத்துநகர் ஜேசுநகரை சேர்ந்த பெரியசாமி மகன் முனியசாமி (40) மற்றும் தாளமுத்துநகர் சமீர்வியாஸ் நகரைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் சஞ்சய் குமார் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆட்டை திருடியது தெரியவந்தது.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி சங்கரபேரியைச் சேர்ந்த சின்னத்துரை மனைவி வசந்த மாரி (40) என்பவரது ஆட்டையும் திருடியது தெரியவந்தது. தொடர்ந்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து முனியசாமி, சஞ்சய்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகளையும் மீட்டனர்.