மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேர் பலி: லாரி டிரைவர் கைது
லாரி டிரைவரை கைது செய்தனர்
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி தாளமுத்துநகர் குமரன் நகரைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி மாரியம்மாள் என்ற முத்துகனி (வயது 48). இவர்களது இரண்டாவது மகள் கன்னிசெல்வி (21). கடந்த மாதம் 26-ந் தேதி காரைக்குடியில் இருந்து மாரியம்மாள், மகள் கன்னிசெல்வி, மருமகன் மணிகண்டராஜா ஆகிய மூன்று பேரும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அதிகாலையில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றான் கண்பாலம் பகுதியில் வந்த போது பின்னால் வந்த லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள், கன்னிசெல்வி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் மணிகண்டராஜா படுகாயம் அடைந்தார். அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டராஜா உயிரிழந்தார்.
இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை பிடிப்பதற்கு விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னாபீர்முகமது, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் எட்டயபுரம், கீழஈரால், குறுக்குச்சாலை, புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த லாரி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நீலமங்கலம் என்பவர் லாரி என்பது தெரியவந்துள்ளது. இந்த லாரியை மணச்சநல்லூர் அருகே உள்ள சீர்க்காம்பூர் கிராமத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் மகன் பிரவீன் (30) ஓட்டி வந்துள்ளதை கண்டுபிடித்தனர். பின்னர் லாரியை ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் வைத்து போலீசார் பறிமுதல் செய்து, லாரி டிரைவரை கைது செய்தனர்.