ஒரு எலுமிச்சை பழம் ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோவிலில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
திருவெண்ணெய்நல்லூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் முதல் 9 நாட்கள் நடைபெற்ற விழாவின்போது முருகன் சிலையில் உள்ள வேல் மீது ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழம் குத்தி வைக்கப்பட்டது. இவ்வாறாக வேலில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சை பழங்கள் பத்திரமாக சேகரித்து வைக்கப்பட்டது. 11-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு 9 எலுமிச்சை பழங்களும் ஏலம் விடப்பட்டது. இதனை நாட்டாண்மை புருஷோத்தமன் ஏலம் விட்டார்.
எலுமிச்சை பழங்கள் ஏலம்
இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாத தம்பதியினர், வியாபாரிகள் பங்கேற்றனர்.
இதில் முதல் நாள் எலுமிச்சை பழம் ரூ.13 ஆயிரத்துக்கும், 2-வது நாள் எலுமிச்சை பழம் ரூ.4 ஆயிரத்து 200-க்கும், 3-வது நாள் எலுமிச்சை பழம் ரூ.11 ஆயிரத்துக்கும், 4-வது நாள் எலுமிச்சை பழம் ரூ.4 ஆயிரத்து 100-க்கும், 5-வது நாள் எலுமிச்சை பழம் ரூ.7 ஆயிரத்துக்கும், 6-வது நாள் பழம் ரூ.6 ஆயிரத்துக்கும், 7-ம் நாள் பழம் ரூ.15 ஆயிரத்து 200-க்கும், 8-ம் நாள் பழம் ரூ.3 ஆயிரத்து 900-க்கும், 9-ம் நாள் பழம் ரூ.5 ஆயிரத்து 600-க்கும் ஏலம் போனது. இதனை வாங்குவோரின் குறைகள் நீங்கும், வியாபாரம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால் பலர் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். ஏலம் எடுத்தவர்களுக்கு எலுமிச்சை பழத்துடன் ஒரு உருண்டை கருவாடு சாதம் வழங்கப்பட்டது.