கர்நாடகத்தில் தாலுகாக்களில் மகளிர் கூட்டுறவு வங்கி தொடங்கப்படும்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் தாலுகாக்களில் மகளிர் கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்

Update: 2022-03-20 16:27 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் தாலுகாக்களில் மகளிர் கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

தனியாக வாழ முடியாது

கர்நாடக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் கூட்டுறவு ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூரு கெங்கேரியில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு ‘கூட்டுறவு ரத்னா' விருதுகளை வழங்கி பேசியதாவது:-

கூட்டுறவு என்பது நமது வாழ்க்கையில் ஒரு பாகம். மனிதர்கள் தனியாக வாழ முடியாது. அதனால் ஆதிகாலத்தில் இருந்தே மனிதர்கள் கூட்டு அடிப்படையில் தங்களின் வாழ்க்கையை நடத்தியுள்ளனர். அதனால் கூட்டுறவு என்பது ஒரு சமூக தேவையான ஒன்று ஆகும். கூட்டுறவு இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. இதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டால் வாழ்க்கை சுலபமாகிவிடும். முன்னேற்றம் அடைய முடியும். இதை புரிந்து கொள்ளாவிட்டால் வளர்ச்சி அடைய முடியாது.

நாம் மறக்கக்கூடாது

அதனால் இந்த கூட்டுறவுத்துறைக்கு சேவையாற்றியுள்ள 60 பேருக்கு கூட்டுறவு ரத்னா விருது வழங்குவது சிறப்பானது. கர்நாடகத்தில் கூட்டுறவுக்கு பெரிய வரலாறு உள்ளது. ஆசியாவிலேயே முதல் கூட்டுறவு வங்கி கர்நாடகத்தில் தான் தொடங்கப்பட்டது. அந்த கூட்டுறவு வங்கியை தொடங்கியவரின் ஊருக்கு சென்று இருந்தேன். அங்கு சென்றபோது நான் பார்த்தேன். அந்த கூட்டுறவு வங்கியின் நிலை மோசமாக இருந்தது. அது மனதுக்கு வருத்தம் அளித்தது.

கூட்டுறவு வங்கி பெரிய அளவில் வளர மூத்தவர்களின் சேவை முக்கியமாகும். அவர்களின் சேவையை நாம் மறக்கக்கூடாது. மராட்டியம், குஜராத் மாநிலங்கள் கூட்டுறவுத்துறையில் முன்னணியில் உள்ளன. அதேபோல் கர்நாடகம் நாட்டிலேயே முதல் இடத்திற்கு வர வேண்டும். கூட்டுறவுத்துறையை அனைத்து துறையிலும் விஸ்தரிக்க வேண்டும்.

குறைந்த வட்டியில் கடன்

மராட்டியம், குஜராத்தை போல் கூட்டுறவுத்துறை மூலம் எல்லா தொழிலையும் மேற்கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு மாதம் ரூ.300 கோடி ஊக்கத்தொகையை அரசு வழங்குகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு உதவ பால் வங்கியை தொடங்க பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். அவற்றுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
விவசாயிகள் முன்னேற்றம் அடைய வேண்டும். விவசாயிகள் உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல, நுகர்வோராகவும் திகழ்கிறார்கள். 

அதனால் விவசாயிகளின் வருவாயை பெருக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி மானியம் வழங்கப்படுகிறது.

மகளிர் கூட்டுறவு வங்கி

பிரதமரின் கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் கர்நாடக அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்குகிறது. மத்திய அரசு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. கர்நாடகத்தில் அனைத்து தாலுகாக்களிலும் மகளிர் கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்படும். 

இதற்கு தேவையான நிதி உதவியை மாநில அரசு வழங்கும். பெண்கள் உண்மையானவர்கள். அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். நம்பகத்தன்மை மிக முக்கியம். கூட்டுறவுத்துறையில் நிறைய புகார்கள் வருகின்றன.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

மேலும் செய்திகள்