கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை கீதா வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வகை அரசு பள்ளிகளிலும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பள்ளி மேலாண்மைகுழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் கடமை மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு குறித்து விழிப்புணர்வு வழங்க உள்ளனர்.
பெண்களுக்கு முன்னுரிமை
பள்ளி மேலாண்மைக்குழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் போன்ற 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவாகும். இக்குழுவின் தலைவராக அப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையின் பெற்றோர் தான் இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பள்ளிகளில் மாணவ, மாணவர்களின் சேர்க்கையைஅதிகரித்தல், இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல், ஆசிரியர்களின் வருகை மற்றும் மாணவர்களின் வருகையை உறுதி செய்தல், பள்ளி கட்டமைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பள்ளி தேவைகளை கண்டறிந்து திட்ட அறிக்கை தயாரித்தல், குழந்தைகளின் உரிமைகளை காத்தல், மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி பெறுவதை உறுதி செய்தல், தரமான சத்துணவு உண்பதை உறுதி செய்தல், பள்ளிக்கு வழங்கப்படும் தொகையை பள்ளி வளர்ச்சிக்கு முறையாக பயன்படுத்துவது உள்ளிட்ட பணிகள் இக்குழுவின் முக்கிய நோக்கம். எனவே அரசு பள்ளிகளில் மாணவர்களுடைய சேர்க்கை அதிகரித்தல் மற்றும் பள்ளிக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு, பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து செயலாற்றிடவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் அப்துல்கலீல், துணைசெயலாளர் பாலாஜி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.