திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குமரியில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலை சமாளிக்க திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.

Update: 2022-03-20 15:43 GMT
திருவட்டார்:
குமரியில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலை சமாளிக்க திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர். 
திற்பரப்பு அருவி
குமரி மாவட்டத்தில் தற்போது கோைட வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான தண்ணீர் விழுகிறது. இதையொட்டி அருவியில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள விடுதிகளில் ஏராளமான வெளியூர் சுற்றுலா பயணிகள் தங்கி இருந்து காலை, மாலை நேரங்களில் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று திற்பரப்பு அருவியில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அருவி மற்றும் சிறுவர் நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்தனர். 
மேலும் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் படு ஜோராக நடந்தது. 
மாத்தூர் தொட்டிப்பாலம்
இதுபோல் ஆசியாவிலேயே நீளமான உயரமான மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு நடந்து சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர். 
அருகில் உள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்