தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்
தி்ண்டுக்கல்:
புகாருக்கு உடனடி தீர்வு
பழனி திருஆவினன்குடி கோவில் அருகே சாக்கடை கால்வாய் குறுகலாக உள்ளதால் கழிவுநீர் தெருவில் தேங்குவதாக பழனியை சேர்ந்த முத்து என்பவர் ‘தினத்தந்தி’ புகார் பெட்டி வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவித்து இருந்தார். அது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக சாக்கடை கால்வாயை சீரமைக்கும் பணி தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து முத்து ‘தினத்தந்தி’க்கு நன்றி தெரிவித்தார்.
வேகத்தடை வேண்டும்
பழனி அடிவாரம் தேவர் சிலை பகுதியில் இருந்து கிரிவீதி மற்றும் திருஆவினன்குடி கோவிலுக்கு செல்லும் பாதையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே கிரிவீதி, திருஆவினன்குடி கோவிலுக்கு செல்லும் பாதையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரியப்பன், பழனி.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
தேனி அல்லிநகரம் 12-வது வார்டு கபிலர் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயலட்சுமி, அல்லிநகரம்.
மரம் அப்புறப்படுத்தப்படுமா?
ஆத்தூர் ஒன்றியம் அய்யன்கோட்டை பகுதியில் சாலையோரத்தில் இருந்த பழமையான மரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. தற்போது வரை அந்த மரம் அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே மரத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தேவா, அய்யன்கோட்டை.