மறைமலைநகர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நூதன திருட்டு

மறைமலைநகர் அருகே பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் நூதன முறையில் 10½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-03-20 14:38 GMT
நகை திருட்டு

சென்னை பெருங்குடி ராஜீவ் நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கமலா (வயது 46). இவர் வீட்டில் இருந்த நகைகளை பையில் எடுத்துக்கொண்டு மதுராந்தகத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மதுராந்தகத்தில் இருந்து பஸ் மூலம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது புலிப்பாக்கம் டோல்கேடில் பஸ்சில் 6 வாலிபர்கள் ஏறி உள்ளனர். இந்த வாலிபர்கள் பஸ்சில் இருந்த கமலாவிடம் கீழே சில்லரை காசு விழுந்துவிட்டது அதனை எடுத்து தரும்படி கூறியுள்ளனர். கமலா கீழே கிடந்த சில்லரையை எடுத்து அந்த வாலிபர்களிடம் கொடுத்து உள்ளார். பின்னர் பஸ் காட்டாங்கொளத்தூர் அருகே வந்தபோது கமலா தனது கையில் வைத்திருந்த நகை பையை காணவில்லை என்று கூறியுள்ளார். அந்த பையில் 10½ பவுன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் ஆகியவை இருந்ததாக தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை

இது குறித்து கமலா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 57). இவர் தனது வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை தனது மோட்டார் சைக்கிள் சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு சிங்கப்பெருமாள்கோவிலில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக சென்றார். அப்போது வங்கியில் கூட்டமாக இருந்ததால் அருகில் உள்ள கூரியர் நிறுவனத்திற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த ரூ.5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்