ஊட்டி மஞ்சூர் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணி
ஊட்டி-மஞ்சூர் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஊட்டி
ஊட்டி-மஞ்சூர் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
அரசு பஸ்கள்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து லவ்டேல் கைகாட்டி வழியாகவும், எமரால்டு, பிக்கட்டி வழியாகவும் என 2 சாலைகள் மஞ்சூருக்கு செல்கிறது. ஊட்டிக்கு வரும் வெளிமாநில, பிற மாவட்ட சுற்றுலா பயணிகள் அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம் மற்றும் அணை பகுதிகளை பார்வையிட எமரால்டு சாலை வழியாக வாகனங்களில் வருகின்றனர்.
எடக்காடு, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மஞ்சூர்-எமரால்டு-ஊட்டி சாலையில் சில இடங்கள் குறுகலாக உள்ளன. இதனை அகலப்படுத்தும் பணி நடந்தது.
வாகன ஓட்டிகள் அச்சம்
மேலும் கட்லாடா, கரும்புள்ளி ஆகிய இடங்களில் 2 சிறிய பாலங்கள் உள்ளது. இந்த பாலங்களில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத நிலை காணப் பட்டது. மேலும் இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் இருந்தது.
அத்துடன் இந்த பாலம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் அரசு பஸ்கள், கனரக வாகனங்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வந்தன. மேலும் இந்த பாலத்தை கடந்து செல்லும் போது வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
புதிய பாலம்
இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கரும்புள்ளியில் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொக்லைன் எந்திரம் உதவியோடு பழைய பாலம் அருகே குழி தோண்டப்பட்டது.
முதலில் கான்கிரீட் கொண்டு அடித்தளம் அமைக்கப்பட்டு, பின்னர் பாலம் கட்டப்படுகிறது. பழைய பாலத்தை விட சற்று அகலமாக புதிய பாலம் அமைக்கப்படுகிறது. மேலும் அதன் அடிப்பகுதியில் மழைநீர் செல்லும் வகையில் குழாய்கள் பொருத்தப்பட உள்ளது.
அங்கு குறுகிய சாலைகளை அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. மேலும் கட்லாடா பகுதியில் உள்ள சிறிய பாலம் அருகே புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.