ஊட்டியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்தனர்
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் பலர் வந்து உற்சாகத்துடன் பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்தனர்.
ஊட்டி
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் பலர் வந்து உற்சாகத்துடன் பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள்
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.
நுழைவுவாயிலில் டிக்கெட் பெற சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் உள்ள சென்று கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப் பட்ட மலர் பூந்தொட்டிகளை பார்வையிட்டனர்.
அதில் பூத்துக் குலுங்கிய மலர்கள் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கல்லாகிய மரம், அலங்கார வேலிகளை ரசித்தனர். பராமரிப்பு பணி காரணமாக பெரிய புல்வெளி மைதானம் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
படகு இல்லத்தில் குவிந்தனர்
இதனால் அவர்கள் அருகே புல்வெளியில் அமர்ந்து குடும்பத்துடன் ஓய்வு எடுத்தனர். ஊட்டி ரோஜா பூங்காவில் கோடை சீசனை வரவேற்கும் வகையில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஊட்டி படகு இல்லத்தில் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. மிதிபடகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்தனர். அப்போது திடீரென பலத்த மழை பெய்த தால் பாதுகாப்பு கருதி மிதி படகு, துடுப்புப் படகுகள் இயக்கம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
மோட்டார் படகுகள் தொடர்ந்து இயக்கப்பட்டன. இருப்பினும் சிலர் மழையை பொருட்படுத்தாமல் நனைந்தும், குடைகளைப் பிடித்தும் சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகள் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.
காட்சி மாடத்தில் நின்று ஏரி பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திடீர் மழையால் ஊட்டியில் நிலவிய குளு குளு காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 9 ஆயிரத்து 441 பேர் வருகை தந்தனர். அதே போல் பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்தது. வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் படையெடுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.