அரசுத்துறையில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்
ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும் என்று மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கோரிக்க விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ஆசிரியர் நகரில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் மல்லிகார்ஜூனன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.
மாநில பொதுச்செயலாளர் வெங்கடாஜலபதி, மாநில பொருளாளர் வேல்முருகன், மாநில துணைத் தலைவர் ஜெய்சங்கர், துணை பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மாவட்ட பொருளாளர் எடிசன் நிதிநிலை வாசித்தார். இதில் மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரசுத்துறையில் காலியாக உள்ள ஜீப் ஒட்டுநர் காலி பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக நிரப்ப வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து ஒட்டுநர்களுக்கும் ரூ.4200 தர ஊதியம் வழங்க வேண்டும், அனைத்துத்துறை ஒட்டுநர்களுக்கும் அரசின் வழிகாட்டுதல் மதிப்பீட்டின்படி வீட்டுமனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.