100 பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் கவிழ்ந்தது; மாணவர்கள் உள்பட 6 பேர் பலி
துமகூரு அருகே 100 பயணிகளுடன் அதிவேகமாக சென்ற தனியார் பஸ் கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்பட 6 பேர் உடல்நசுங்கி பலியானார்கள். படுகாயம் அடைந்த 35 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
துமகூரு:
மேற்கூரையில் அமர்ந்து பயணம்
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவில் உள்ளது ஒய்.என்.ஒசக்கோட்டே கிராமம். இந்த கிராமம் ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் ஒய்.என்.ஒசக்கோட்டேயில் இருந்து பாவகடாவுக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து உள்ளனர். அந்த பஸ் நிரம்பி வழிந்ததால் சுமார் 40 பேர் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தனர். மேற்கூரையில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் ஆவர்.
அந்த பஸ் பாவகடாவில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பலவள்ளிகட்டே என்ற கிராமம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய அந்த பஸ் சாலை தடுப்பு சுவரை இடித்து கொண்டு பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
6 பேர் சாவு
மேலும் பஸ்சுக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பாவகடா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அப்பகுதி மக்கள் மீட்பு பணியிலும் களம் இறங்கினர். இதற்கிடையே அங்கு வந்த போலீசாரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அப்போது இடிபாடுகளில் சிக்கி ஒரு இளம்பெண் உள்பட 5 பேர் இறந்தது தெரியவந்தது. 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அவர்களை போலீசார் மீட்டு பாவகடா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 21 பேர் துமகூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10 பேருக்கு பாவகடா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது.
பலி எண்ணிக்கை உயர...
இதற்கிடையே விபத்தில் பலியான 6 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஒய்.என்.ஒசக்கோட்டையை சேர்ந்த கல்யாண்(வயது 18), பெத்தகானஹள்ளியை சேர்ந்த அமுல்யா(17), அவரது அக்காள் ஹர்ஷிதா(21), பெஸ்டரஹள்ளியில் வசித்து வந்த ஷாநவாஸ்(18), நீலம்மனஹள்ளியை சேர்ந்த பாபுபலி(18), சூலநாயக்கனஹள்ளியில் வசித்து வந்த அஜித்(27) என்பது தெரியவந்தது.
இவர்களில் அஜித் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். கல்யாண், அமுல்யா, ஹரிஷிதா, பாபுபலி 4 பேரும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆவர். ஷாநவாஸ் கம்ப்யூட்டர் சென்டரில் ஊழியராக வேலை செய்து வந்தவர் ஆவார். படுகாயம் அடைந்தவர்கள் பெயர், விவரங்கள் தெரியவில்லை. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல்குமார் செபட் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
பரபரப்பு
அதுபோல பாவகடா எம்.எல்.ஏ. வெங்கடரமணப்பா ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பஸ்சில் அதிகளவில் பயணிகள் ஏற்றப்பட்டதும், டிரைவர் பஸ்சை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியது தான் விபத்துக்கு காரணம் என்றும் தெரியவந்தது. முன்னதாக விபத்து நடந்ததும் டிரைவரும், கண்டக்டரும் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த விபத்து குறித்து பாவகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் விபத்துக்குள்ளான பஸ்சையும் போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ள டிரைவர், கண்டக்டரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் துமகூரு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்பத்திரி முன்பு கூடிய உறவினர்கள்
முன்னதாக பஸ் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 35-க்கும் மேற்பட்டோர் துமகூரு, பாவகடாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்ததும் ஆஸ்பத்திரிகளின் முன்பு அவர்களது உறவினர்கள் கூடினர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் உறவினர்களை நினைத்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதனால் ஆஸ்பத்திரிகளின் முன்பு பரபரப்பு உண்டானது.
அரசு பஸ் நிறுத்தப்படுவது இல்லை
விபத்து நடந்த இடம் பல்லாரி சாலையில் அமைந்து உள்ளது. பல்லாரி உள்ளிட்ட வடகர்நாடகத்தில் இருந்து வரும் பஸ்கள் ஒய்.என்.ஒசக்கோட்டேயில் நிறுத்தப்படுவது இல்லை. ஒய்.என்.ஒசக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கொட்டள்ளி, சிக்கள்ளி, கேரம்புரா, சுலநாயக்கனஹள்ளி உள்பட 6 கிராம மக்கள் பாவகடாவுக்கு செல்ல தனியார் பஸ்களை தான் நம்பி இருக்க வேண்டி உள்ளது.
ஒய்.என்.ஒசக்கோட்டேயில் இருந்து பாவகடாவுக்கு 3 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். நேற்று விபத்துக்குள்ளான பஸ்சை தவிர மற்ற 2 பஸ்களும் வரவில்லை என்றும், இதனால் விபத்துக்குள்ளான பஸ்சில் அதிகளவில் பயணிகளை ஏற்றி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிதறி கிடந்த புத்தகங்கள்
விபத்தில் சிக்கிய பஸ்சில் பயணித்தவர்கள் பெரும்பாலோனார் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். பஸ் விபத்தில் சிக்கியதும் மாணவர்கள் கொண்டு வந்த புத்தகங்கள், டிபன் பாக்சுகள் விபத்து நடந்த இடத்தில் இருந்து சில அடி தூரம் வரை சிதறி கிடந்தன.
இது காண்போர் நெஞ்சை உறைய வைத்தது. மேலும் விபத்துக்குள்ளான பஸ் பழைய பஸ் இல்லை என்பதும், 2012-ம் ஆண்டு வாங்கப்பட்டது என்றும் தெரியவந்து உள்ளது. பஸ்சுக்கு உரிய அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு குறித்து பஸ்சில் வாசகம்
பஸ்சை டிரைவர் வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்து உள்ளது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான பஸ்சில் ‘உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை’ என்ற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.
பஸ்சில் மட்டும் இப்படி வாசகம் எழுதினால் போதாது, பயணிகள் உயிருக்கு உண்மையிலேயே பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.