கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில், பகவத் கீதையை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு; பசவராஜ் பொம்மை பேட்டி

கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-19 21:45 GMT
யாதகிரி:

சித்தராமையா கருத்து

  குஜராத்தில் தொடக்க கல்வி பாடத்திட்டத்தில் பகவத்கீதை சேர்க்கப்பட்டுள்ளது. அதுபோல், கர்நாடகத்திலும் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து பகவத் கீதை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

  இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும், பகவத் கீதையை கர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கலாம் என்றும், பகவத் கீதை, பைபிள், குர்ரானை சேர்க்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறி இருந்தார். இதுகுறித்து யாதகிரியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர்
நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆலோசனை நடத்தி முடிவு

  குஜராத் மாநிலத்தில் பகவத் கீதை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றி கர்நாடக அரசுக்கும் தகவல் கிடைத்துள்ளது. பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பது குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரியுடன் ஆலோசிக்கப்படும். உரிய ஆலோசனை நடத்திய பின்பு பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

பகவத் கீதை மாணவர்களுக்கு நன்னெறிகள், நல்ல ஒழுக்கத்தை கற்று கொடுக்கும். அதனால் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

  துமகூருவில் தனியார் பஸ் விபத்தில் சிக்கி இருப்பது குறித்து எனது கவனத்திற்கும் வந்துள்ளது. என்ன காரணத்திற்காக விபத்து நடந்தது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை கிடைத்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டரை விபத்து நடந்த பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளேன்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

குறைகளை கேட்டறிந்தார்

  முன்னதாக அவர் பெங்களூருவில் இருந்து யாதகிரிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். யாதகிரியை வந்தடைந்ததும் அவர் ஹெலிபேடில் இறங்கினார். அப்போது அங்கு குவிந்திருந்த பொதுமக்கள் முதல்-மந்திரியை சந்திக்க முண்டியடித்தனர். 

அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்களிடம் சென்று அவர்களிடம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்