ரூ.129 கோடியில் 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்மாதிரி சாலை
ரூ.129 கோடியில் 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்மாதிரி சாலையாக அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஏலாக்குறிச்சி-தூத்தூர் சந்திப்பு இணைப்புச்சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் ரமணசரஸ்வதி உடனிருந்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறுகையில், பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்காக ரூ.18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருவழி சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் வகையில் முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 32 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும். சாலை விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 32 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.129 கோடி மதிப்பீட்டில் முன்மாதிரி சாலையாக அமைக்கப்பட உள்ளது. சாலை பணிகள் அனைத்தும் தரமாகவும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள்ளாகவே முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது, என்றார்.