குமரியில் கடந்த ஆண்டில் அதிகபாரம் ஏற்றிய வாகனங்களுக்கு ரூ.1¾ கோடி அபராதம் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தகவல்
குமரியில் கடந்த ஆண்டில் அதிகபாரம் ஏற்றிய வாகனங்களுக்கு ரூ.1¾ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.
நாகர்கோவில்:
குமரியில் கடந்த ஆண்டில் அதிகபாரம் ஏற்றிய வாகனங்களுக்கு ரூ.1¾ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மூலமாக அதிகபாரம் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களின் போக்குவரத்து குறைந்தபாடில்லை.
இதற்கிடையே குமரி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்த கூட்டத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு தொடர்ந்து, விதிகளை மீறும் வாகனங்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சரகத்தில் நேற்று 2 வாகனங்கள் பிடிபட்டுள்ளது. இதே போல மேலும் பல இடங்களில் அதிகபாரம் ஏற்றி வந்த வாகனங்கள் சிக்கியுள்ளன.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் அதிகபாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தினமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.3-ல் இருந்து ரூ.4 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது’’ என்றார்.
---