ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை மீட்ட போலீசார்
ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை போலீசார் மீட்டனர்.
அரியலூர்:
அரியலூர்-ஓட்டகோவில் ரெயில் நிலையங்கள் இடையே ெரயில்வே தண்டவாளம் ஓரத்தில் நேற்று அதிகாலை ஒரு வாலிபர் விழுந்து கிடந்தார். அந்த வழியாக வயல் வேலைக்கு சென்றவர்கள் அதைக்கண்டு, ஒருவர் இறந்து கிடப்பதாக அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சுகுமார், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு விழுந்து கிடந்தவரை பார்த்தபோது அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருந்த இடத்திற்கும், சாலைக்கும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இருந்ததால், துணியில் அவரை படுக்க வைத்து 2 போலீசாரும் அவரை தூக்கிக் கொண்டு சாலைக்கு வந்தனர். மேலும் ஆம்புலன்சை வரவழைத்து அவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.பின்னர் அந்த வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது பையில் சென்னையில் இருந்து கரூருக்கு செல்வதற்கான ெரயில் டிக்கெட் இருந்தது. மேலும் அவர் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு போலீசார் விசாரித்தபோது, அவர் கரூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த மேகவர்ணன்(வயது 32) என்பது தெரியவந்தது. அவர் சென்னையில் இருந்து மங்களூரு நோக்கி செல்லும் விரைவு ெரயிலில் பயணம் செய்த போது ெரயிலில் இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது. இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த அரியலூர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.